எஸ்.பி.எம். இலக்கியம் - நாவல் : இலட்சியப்பயணம்

மருதன் எதிர் நோக்கிய போராட்டங்களும் சவால்களும்

முன்னுரை: 

மலேசிய எழுத்தாளர் ஐ.இளவழகு அவர்கள் எழுதிய ‘இலட்சியப் பயணம்’  நாவலின் முதன்மை கதைப்பாத்திரம் மருதனாகும். மருதன் தன் இலட்சியக் கனவான சுதந்திரமான தோட்ட வாழ்க்கையைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும் என்பதில் குறியாக இருந்து பல போராட்டங்களுக்கும் சவால்களுக்கும் இடையில் வெற்றிக் காண்கிறான்.

கருத்துகள்:

மருதன், ஆண்டியப்பன் வேலம்மாள் தம்பதிகளின் மூத்த மகனாகப் பிறக்கின்றான். ஏழை தோட்டத் தொழிலாளர் குடும்பம் என்பதால் வறுமை நிலையில் குடும்பம் தள்ளாடுகிறது. இங்குத் தான் தன் முதல் போராட்டாத்தைத் தொடங்குகின்றான் மருதன். குடும்ப நல்வாழ்வுக்காகப் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு தன் தாய்தந்தையரோடு பால்மரம் சீவச் செல்கிறான். இவன் வருமானம் வருவதால் உடன்பிறப்புகள் தங்கள் கல்வியைத் தொடர முடிகிறது; குடும்ப வறுமை ஓரளவு சீரடைகிறது. இருப்பினும் தன் இலட்சியக் கனவை மருதன் கைவிடவில்லை.

குடும்பத்தில் தொடங்கிய போராட்டம் அவன் வேலை செய்யும் இடத்திலும் தொடர்கிறது. தோட்டத் தொழிற்சங்க செயலாளராக இருப்பதால் தோட்ட நிர்வாகம் இவனிடம் பகைமைப் போக்கையே கடைப்பிடிக்கிறது. சின்னக் கிராணி முத்து, பெரிய கிராணி, சின்னக் கிராணி சண்முகம் ஆகியோரின் எதிர்ப்பைச் சமாளிக்க வேண்டியவனாகிறான். கோதண்டனை அறைந்த்தால் தோட்டத் தொழிலாளர் முன்பு மன்னிப்புக் கேட்க வைத்த மருதனுக்கு வெளிகாட்டில் சில மரங்களை வெட்டவில்லை எனக் காரணம் காட்டி ஒரு நாள் வேலையை இழக்கச் செய்கிறான் முத்து. முத்துவுக்குப் பின் வரும் சின்னக் கிராணி சண்முகமும் மருதனிடம் பகைமைப் போக்கையே கடைப்பிடிக்கிறான். இவ்வாறு வேலையிடத்திலும் போராட்டங்களையும் சவால்களையும் சந்த்திக்கிறான்.

மருதனின் போராட்டம் அவன் காதல் வாழ்க்கையிலும் தொடர்கிறது. தான் உயிருக்கு உயிராகக் காதலிக்கும் ராதாவின் கரம் பற்ற முடியாமல் காதல் பாதியிலேயே முறிகிறது. ராதா மருதனைத் திருமணம் செய்ய அவள் அப்பா தண்டல் தர்மலிங்கமும் அண்ணன் மணியமும் முட்டுக் கட்டையாக இருக்கின்றனர். அவர்களை எதிர்த்து மருதனால் ஒன்றும் செய்ய முடியவில்லை; அவன் குடும்பநிலை அவனைத் தடுக்கிறது.  இதனால், ராதா தன் அத்தை மகனைத் திருமணம் செய்ய நேருகிறது. இந்தக் காதல் போராட்டம் தோல்வியில் முடிந்தாலும் மருதன் தன் இலட்சியப் போராட்டத்தைத் தொடர்வதில் சற்றும் தளர்ந்துவிடவில்லை.

தந்தை ஆண்டியப்பனின் மறைவுக்குப் பின் மருதன் குடும்பத்துடன் சித்தியவானுக்குப் புலம்பெயர்ந்து வாழ்க்கைப் போராட்டத்தையும் சவால்களையும் எதிர்நோக்குகின்றான்.  சித்தியவானில் ‘உதய சூரியன்’ என்ற பெயரில் புத்தகக் கடையொன்றைத் திறந்து வியாபாரத்தில் ஈடுபடுகிறான். அவனின் இந்தப் போராட்டத்திற்கு நண்பன் தமிழ்ச்செல்வனும் லீலாவும் உறுதுணையாக இருக்கின்றனர். வியாபாரம் ‘சூடு’ பிடிக்க ஆரம்பித்த்தும் சாப்பாட்டுக் கடை, துணி வியாபாரம் போன்ற மேலும் சில துணை வியாபாரத்தைத் தொடங்குகிறான்.


வியாபாரத்தில் காலூன்ற ஆரம்பித்ததும் தன் இலட்சியக் கனவின் முதல் கட்டமாக சிறு தோட்டம் ஒன்றைத் தைப்பிங்கில் வாங்குகின்றான். அதிலும் இலாபம் ஈட்டுவதில் வெற்றி பெறுகிறான். இவ்வெற்றி ஒரு தோட்டத்தையே வாங்கி நிர்வகிக்கும் அளவுக்குத் துணிவை அவனுக்குக் கொடுக்கிறது. இதன் மூலம் தன் இலட்சிய தோட்டமான ‘பாட்டாளித் தோட்டத்தை’ உருவாக்குவதில் வெற்றி பெறுகிறான் மருதன்.

முடிவுரை:


பாடாங் தோட்டத்தில் தொடங்கிய மருதனின் போராட்டம் பாட்டாளித் தோட்டத்தில் முடிவடைகிறது. சவால் நிறந்த தன் வாழ்க்கைப் பயணத்தை மருதன் ‘துணிந்தவனுக்குத் தூக்கு மேடை பஞ்சு மெத்தை’ என்பதற்கு ஏற்ப துன்பங்களையும் தோல்விகளையும் பொருட்டாக நினைக்காமல் குறிக்கோளைத் தளராமல் நோக்கிச் சென்று வெற்றியடைகிறான். நாவலாசிரியர் மருதனை ஓர் இலட்சிய நாயகனாகவே படைத்துள்ளார். 

*********************************************************************************

ராதாவின்  பாத்திரப் படைப்பு

முன்னுரை: 

மலேசிய எழுத்தாளர் ஐ.இளவழகு அவர்கள் எழுதிய ‘இலட்சியப் பயணம்’  நாவலில் முதன்மை கதைப்பாத்திரமான மருதனின் காதலியாகப் படைக்கப்பட்டுள்ளாள் ராதா. உயர்கல்வியற்ற சாதாரண தோட்டப்புற பெண்ணாக ராதாவைப் படைத்துள்ளார் நாவலாசிரியர்.

கருத்துகள்:

தோட்டப்புறப் பெண்ணாகப் படைக்கப்பட்டாலும் ராதா ஒழுக்கத்தைப் பேணுபவளாகச் சித்தரிக்கப்பட்டுள்ளாள். மருதனுடன் காதல் கொண்டபோதிலும் ராதா வரம்பு மீறாமலே அவனுடன் பழகி வந்துள்ளாள். தங்கள் நிரைகளில் இருவரும் தனியாக இருந்தபோதும் ஒழுக்கமும் கண்ணியமும் தவறாமல் நடந்து கொண்டது இதற்குச் சான்றாகும்.

ஒழுக்கத்தைப் பேணுபவளாகப் படைக்கப்பட்டதால் அவள் குடும்பத்திற்கும் அடங்கியவளாக இருக்கிறாள். தந்தை தனக்குப் பிடிக்காதவனை மணமகனாகத் தேர்வு செய்ததால் தன் எதிர்ப்பை வெளிப்படுத்துவதோடு நின்றுவிடுகிறாள். அவர்களை எதிர்த்து, தன் அண்ணன் மணியம் நீலாவுடன் ஓடிப்போனதுபோல் அவளும், மருதனுடன் ஓடிப்போக முயவில்லை. தன் குடும்ப மானத்தைக் காக்க தன் அத்தானையே மணக்கிறாள்.

மேலும், நாவலாசிரியர் ராதாவைச் சுயநலமற்றவளாகவும் படைத்துள்ளார். மருதன் சில  ஆண்டுகள் கழித்துதான் திருமணம் செய்துகொள்ள முடியும் என்று கூறி அதற்கான காரணத்தையும் கூறுகிறான். ஆனால் ராதாவோ, தன்னை உடனே திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தாமல் எவ்வாறு அவன் துன்பத்தில் பங்குக் கொண்டு அவனுக்கு உதவ முடியும் என்று எண்ணுகிறாள். இதற்காக, சில ஆண்டுகள் குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதைத் தள்ளிப்போடலாம் எனவும் ஆலோசனைக் கூறுகிறாள். இதன் மூலம் அவளின் தன்னலமற்ற எண்ணம் வெளிப்படுகிறது.

தொடர்ந்து, நாவலாசிரியர் அவளை நல்ல காதலியாகவும் நல்ல மனைவியாகவும் படைத்துள்ளார். காதலிக்கும்போது மருதனை உண்மையாக நேசிக்கிறாள். அவனைப் பற்றி தங்கம் அக்காவிடம்  கேட்டு அறிந்து பெருமைபடுகிறாள். அதே நேரத்தில் தன் அத்தானுடன் நிச்சயிக்கப்பட்ட பின் அவனுடன் பேசுவதையும் அவனைப் பார்ப்பதையும் தவிர்க்கிறாள். இருப்பினும், லீலா மருதனுடன் பழகுவதைப் பார்ர்த்து பொறாமை கொள்ளவும் செய்கிறாள் என்பது லீலா மருதனின் வீட்டிற்கு வந்து அவனுடன் பேசுவதைப் பார்த்துத் தங்கத்திடம் விசாரிப்பது மூலம் அறிந்துகொள்ளலாம்.

முடிவுரை:

ராதா காதலில் தோல்வி அடைந்தாலும் பெண்கள் சிலரைப் போல் தற்கொலை செய்து கொள்ளாமல் துணிவுடன் புதிய வாழ்க்கையை ஏற்றுக் கொள்கிறாள். இதன் மூலம் நாவலாசிரியர் ஐ. இளவழகு அவர்கள் அவளை ஓர் இலட்சியப் பெண்ணாகவே படைத்துள்ளார்.

*********************************************************************************************

லீலாவின்  பாத்திரப் படைப்பு

முன்னுரை: 

மலேசிய எழுத்தாளர் ஐ.இளவழகு அவர்கள் எழுதிய ‘இலட்சியப் பயணம்’  நாவலில் முதன்மை கதைப்பாத்திரமான மருதனை ஒருதலையாக காதலிக்கும் பெண்ணாக படைக்கப்பட்டுள்ளாள் லீலா. அறிவும் அழகும் நிறைந்த பெண்ணாகவும் லீலாவை படைத்துள்ளார் நாவலாசிரியர்.

கருத்துகள்:

பாடாங் தோட்டத்திற்கு வெளியே மளிகைக்கடை, சாப்பாட்டுக்கடை இரண்டையும்  ஒரு சேர நடத்துபவரின் மகளாக லீலாவை அறிமுகப்ப்படுத்துகிறார் ஆசிரியர் ஐ. இளவழகு. அத்துடன் தமிழறிவும் அவளிடம் உள்ளது என்பதை எழுத்துத்துறையின் மீதும் கதைப்புத்தகங்கள் படிப்பதன் மீதும்  அவள் கொண்ட ஆர்வத்தின் மூலம் நாம் அறியலாம்.

அவளின் அழகை மருதன் இரசிப்பதன் மூலம் அவள் நல்ல அழகி என்பதை நம்மால் ஊகிக்க முடிகிறது. ஆனால், அந்த அழகு மருதனின் எண்ணத்தை மாற்ற முடியவில்லை.
மருதனின் நல்ல எண்ணமும் அவனின் திறமைகளும் அவளை அவன்பால் ஈர்க்கிறது. தன் எண்ணத்தை மூடி மறைப்பவளாக அவள் படைக்கப்படவில்லை. இந்தக் குணமே தமிழ்ச்செல்வனைப் பெரிதும் கவர்கிறது.  மருதன் மீது அவள் கொண்ட காதலை அவள் மருத்துவமனையில் அவனைச் சந்திக்கும்போது தெளிவாகவே விளக்குகிறாள்.

லீலா, தோல்வியிலும் மனம் கலங்காதவளாகவும் படைக்கப்பட்டுள்ளாள். மருதன் அவள் காதலை ஏற்க முடியாது என்ற சொன்னபோது கலங்கினாலும் பின் அவனின் யோசனையை ஏற்று தமிழ்ச்செல்வனை மணக்கிறாள். அந்த வாழ்க்கையை மகிழ்ச்சிகரமான வாழ்க்கையாக மாற்றுகிறாள். தமிழ்ச்செல்வனுக்கு ஏற்றவளாகத் தன்னை மாற்றிக் கொள்கிறாள். மருதனே அவர்களின் பொருத்தத்தையும் வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் நடத்தும் பாங்கினைப் பார்த்து மகிழ்கிறான்.

அதுமட்டுமின்றி, வியாபாரத்தின் நெளிவு சுழிவுகளையும் அறிந்தவளாகவும் லீலா படைக்கப்பட்டுள்ளாள். இது அவள் மருதனுக்கு வியாபாரத்தில் அறிவுரை கூறியும் ஆலோசனை கூறியும் வழிநடத்துவதன் மூலம் நாம் அறிந்துகொள்ள முடிகிறது. பாடாங் தோட்டத்திலிருந்து வெளியேறி சித்தியவானில் புத்தகக்கடை திறக்கும் மருதனுக்கு லீலாவும் தமிழ்ச்செல்வனும் வழிகாட்டியாக இருக்கிறார்கள்.  

முடிவுரை:

இவ்வாறு லீலாவை ஒரு புதுமைப் பெண்ணாக படைக்க எண்ணியுள்ளார் நாவலாசிரியர். அதன்படியே அவளைப் படைத்தும் உள்ளார்.