Thursday, October 18, 2012

சிலாங்கூர் மாநிலக் கல்வி இலாகாவின் படிவம் 1கான கே.பி.எஸ்.எம் கலைத்திட்ட தமிழ்மொழி தர அடைவு ஆவணம் வெளியீடு

      மலேசியக் கல்வி அமைச்சின் தேர்வு முறைமைகளின் மாற்றங்களுக்கேற்ப இந்த ஆண்டு முதலாம் படிவ பாடத்திட்டம் முழுமையான மாற்றங்கண்டுள்ளது. இந்த மாற்றங்களின் அடிப்படையான விவரங்களையும் தரஅடைவு ஆவணங்களின் விபரங்களையும் ஆசிரியர்கள் அறியும்வகையில் இதுவரை மாநில அளவில் ஆசிரியர்களுக்குப் பயிலரங்குகள் மாநில மற்றும் மாவட்ட இலாகாவால் நடத்தப்பெற்றன.

     முதலாம் படிவ புதிய பாடத்திட்டத்தில் ஏற்பட்டுள்ள இம்மாற்றங்களினால் மாணவர்களும் ஆசிரியர்களும் பல சிக்கல்களை எதிர்நோக்குகின்றனர். இவர்களைச் சரியாக வழிநடத்திச் செல்லவேண்டும் என்ற நோக்கத்தில் இந்தத் தர அடைவு ஆவண மதிப்பீட்டுக் கருவி தொகுதியைச் சிலாங்கூர் மாநிலக் கல்வி இலாகா அண்மையில் வெளியிட்டது. மாநில அளவில் முதலாம் படிவ மாணவர்களை ஒரே வகையான தர அடைவு அவணங்களைப் பயன்படுத்தி கற்றல் அடைவு நிலையை மதிப்பீடு செய்வதற்கு இந்தத் தர அடைவு ஆவணம் உதவியாக அமையும் என்று மாநிலக் கல்வி இலாகாவின் உதவி இயக்குனர் உயர்திரு இராமன் அண்ணாமலை அவர்கள் தெரிவித்தார். மேலும், அவர் தமதுரையில் இத்தர அடைவு ஆவண மதிப்பீட்டுக் கருவி உருவாகுவதற்கு ஆசிரியர்களுக்கு விளக்கமளித்த மலேசிய கல்வியமைச்சின் தேர்வு வாரியத்தின் தமிழ்மொழிக்கான அதிகாரிகளுக்கும் தமது நன்றியைத்  தெரிவித்துக் கொண்டார். 
      இந்தத் தமிழ்மொழி தர அடைவு ஆவணம் சிலாங்கூர் மாநிலத்திலுள்ள பத்து மாவட்ட தமிழப்பணித்தியத் தலைவர்களின் மூலமாக, அனைத்து இடைநிலைப்பள்ளியிலும் படிவம் 1ல் தமிழ்மொழி போதிக்கும் ஆசிரியர்களுக்கும் வழங்கப்படும் என மேலும் அவர் தெரிவித்தார். இறுதியாக தமதுரையில் அவர், இந்த முதலாம் படிவ தமிழ்மொழித் தர அடைவு ஆவண மதிப்பீட்டுக் கருவி தொகுதியை உருவாக்குவதில் பெருந்துணை புரிந்த அனைத்து இடைநிலைப்பள்ளியைச் சார்ந்த தமிழாசிரியர்களுக்கும் மாநிலக் கல்வி இலாகாவின் சார்பில் தமது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதோடு, இந்தத் தர அடைவு ஆவண மதிப்பீட்டுக் கருவி தொகுதியை ஆசிரியர்களும் மாணவர்களும் பயன்படுத்தி நல்ல பயனை அடைய வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.
 

No comments:

Post a Comment